March 31, 2012

ஏப்ரல் ஃபூல்......

ஏப்ரல் மாசம்னாலே எல்லாருக்கு ஞாபகம் வர்றது மத்தவங்கள முட்டாளாக்குறது தான்.....

முன்னாடிலாம் வீட்ட விட்டு வெளில வர்றப்ப ஏதாச்சும் சின்ன புள்ளைங்க தான் ஏப்ரல் ஃபூல் பண்ணுறன்னு சொல்லிட்டு வந்து நிக்கும் . அந்த புள்ளைங்க மூஞ்சுல சந்தோசத்த பாக்கனுங்கறதுக்காகவே ஏமாறலாம் (சின்ன புள்ளைக்கிட்ட ஏமாந்ததும் இல்லாம சமாளிக்குறத பாரு) . சின்ன புள்ளைங்க நான் சைக்கிள்ள போகுறப்ப எல்லாம் அண்ணே சைக்கிள்ல வீல் சுத்துதுண்ணேன்னு கத்துவாங்க . என்னது என்னோட சைக்கிள் வீல் சுத்துதான்னு நானும் அதிசயமா பார்ப்பேன் . நம்ம சைக்கிள்ல வீல் சுத்துதான்னு , அப்புறம் பாத்தா தான் தெரியும் என் சைக்கிள்லயும் அதிசயமா வீல் சுத்துமுன்னு .

இந்த சின்ன புள்ளைங்க பண்ணுற டார்ச்சர விட அதிகமா டார்ச்சர் பண்ணுறது ஏழு கழுத வயசுக்கு வளந்த பெருசுங்க தான் . நேத்துக்கு ஒரு SMS வந்துச்சு . அதுல பாத்தா “உன்னைய பத்தி இன்னைக்கு தான் எனக்கு தெரிஞ்சுது . இனிமே எனக்கு கால் பண்ணாத , மெசேஜ் பண்ணாத” - இப்படி எழுதியிருந்துச்சு . அப்பாடா தொல்ல ஒழிஞ்சுதேன்னு நிம்மதியா இருந்தன் . பாத்தா மெசேஜ் இன்னும் முடியல , கீழ வேற கண்டினியூ ஆகி இருந்துச்சு . இன்னும் மானாவாரியா திட்டி எழுதியிருக்கும்னு பாத்தா அங்க தாங்க வச்சாங்க ஒரு பெரிய அணுகுண்டே வச்சுருந்தானுங்க . அது என்னான்ன “சும்மா உன்னைய ஏப்ரல் ஃபூல் பண்ணலாம்னு தான் அப்படி அனுப்புனன் . ஹேப்பி ஏப்ரல் ஃபூல்”னு இருந்துச்சு . அட படுபாவிகளா நான் சந்தோச வேற பட்டேனேடான்னு நெனச்சுக்கிட்டன் . சாயங்காலம் என் கேர்ள்பிரண்டுக்கிட்ட இருந்து அதே மாதிரி ஒரு மெசேஜ் வந்துச்சு . “இனிமே நான் உனக்கு மெசேஜ் பண்ண மாட்டன் , நீயும் எனக்கு பண்ணாத”ன்னு . சரி இவளும் ஏப்ரல் ஃபூல் தான் பண்ணுறான்னு நெனச்சுக்கிட்டு சாயங்காலம் தெரியாத்தனமா மெசேஜ் அனுப்புனன் . அப்ப வந்துச்சு பாருங்க மெசேஜ் , நான் ஏண்டா பொறந்தன்னு என்னைய யோசிக்க வைக்கிற அளவுக்கு மானாவாரியா திட்டி அனுப்பி வச்சுருந்தா . இவ காலைல சாதாரணமா தான மெசேஜ் பண்ணான்னு பாத்தா , நான் முன்னாடி சொன்ன மெசேஜ்க்கு மேல வேற எதுவும் காணும் . இன்னுமா புரியல ? அவ என்னோட இனிமே பேசவே மாட்டன்னு மெசேஜ் அனுப்பிருக்கா . அப்ப தான் என் மனசுக்குள்ள வெறும் ஹிட்டு சாங்கா ஓடுது . “நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்” - அப்படின்னு ஜாலிலோ ஜிம்கானா பாட்டு ஓடுறப்ப தான் இன்னொரு மெசேஜ் வந்து தொலைச்சுது . ”சும்மா சொன்னன் டா , உன் கூட பேசாம என்னாட்டி இருக்க முடியாது” . (ம்க்கும் நான் போயிட்டா வேற எவனும் ஈசி பண்ணி விட மாட்டான்னு ஒனக்கும் தெரிஞ்சிருக்கு ) .இப்ப என் மனசுல ஓடுன ஹாப்பி சாங்கு அப்படியே ஆப்பு சாங்கா ஓட ஆரம்பிச்சுடுச்சு “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” .

டிஸ்கி : இனிமே மெசேஜ்னு ஏதாச்சும் வந்தா அத முழுசா படிச்சு தொலைக்கனும் , இது எனக்கு மட்டும் இல்லங்க , உங்களுக்கும் தான்

March 25, 2012

அஜால் குஜால்......

பஸ்கி : 
இப்போதைக்கு நாட்டையே உலுக்கிட்டு இருக்குற மேட்டர் என்னான்னா நீல கலர் வஸ்து தாங்க . என்னாடா இவன் வஸ்து கிஸ்துன்னு உளர்றானேன்னு பாக்குறீங்களா , அது தாங்க ப்ளூ பிலிம்........

ப்ளூ பிலிம்னா என்னான்னே தெரியாதவங்களுக்கு ஒரு குட்டி இண்ட்ரோ :
ப்ளூ பிலிம்னா என்னான்னா பெட்ரூம்ல நடக்கறத திருட்டுதனமா புடிச்சு சிடி போட்டு விக்குறது . அத விட்டுட்டு நீங்க படத்துல நீல கலர் மட்டும் தான் இருக்கும்னு நெனச்சா கம்பெனி பொறுப்பில்லீங்க....

சரி நம்ம மேட்டருக்கு வருவோம் .... யோவ் அந்த மேட்டர் இல்லைய்யா . நியூஸ்க்கு வருவோம்னு சொன்னன் . அதாகப்பட்டது என்னான்னா சட்டமன்றத்துல வச்சு எம்.எல்.ஏஸ் எல்லாம் பிட்டு படம் பாத்தாங்களாம் . ஒண்ணு ரெண்டு வாட்டி இல்லைங்க , பல வாட்டி . அத டீடெய்லா பாப்போம்.....

ஒரு இனிய பொழுது எம்.எல்.ஏக்கள் எல்லாம் கர்நாடகா சட்டசபைக்கு வழக்கம் போல தங்கள் குல பணி தூங்கறதுக்கு போயிருந்தாங்க . அன்னைக்கு தான் நடந்துச்சு இந்த ராவடி . சட்டசபைல கேமரா வச்சுருப்பாங்க தெரியும் ஆனா அது வொர்க் ஆகும்னு எத்தன பேத்துக்கு தெரியும் ??? அது வொர்க் ஆகுதான்னு செக் பண்ண போட்டுருக்காங்க . ஆச்சரியம் ஆனா உண்மை கேமரா வொர்க் ஆகி எல்லாத்தையும் படம் புடிக்க ஆரம்பிச்சுடுச்சு . படம் கிளாரிட்டியா இருக்கான்னு செக் பண்ண சட்டசபை வாட்ச்மேன் செக் பண்ணுனாரு ரெக்கார்ட் ஆயிருந்தத . அவரு ஏன் செக் பண்ணாருன்னு கேக்குறீங்களா ?? அவரு வீட்டு கம்ப்யூட்டருக்கு வெப்கேம் இல்லையாம் . அதனால இத எடுத்துட்டு போனா சரியா வருமான்னு பாத்துருக்காரு . அவரு பாத்த வீடியோவுல எல்லா உறுப்பின பெருமக்களும் கொட்டாவி விடுறது , மத்தவன் பாக்கெட்ல இருந்து பணம் எடுக்குறதுன்னு எல்லாம் இருந்துச்சு . வாட்ச்மேன் இதல்லாம் சகஜமப்பான்னு சொல்லி பாத்துக்கிட்டு இருந்தாரு .

அப்ப தான் நடந்துச்சு அந்த கொடுமை . திடீர்னு ஒரு எம்.எல்.ஏ போன எடுத்து எதையோ நோண்ட ஆரம்பிச்சுட்டாரு . இது என்னாடா அதிசயமா இருக்கேன்னு வாட்ச்மேன் பாக்க ஆரம்பிச்சாரு . ஏன்னா அந்த எம்.எல்.ஏக்கு லேண்ட்லைன்ல கூட போன் பண்ண தெரியாது . கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா அதுல ஏதோ படம் ஓடுது . கொஞ்சம் ஜூம் பண்ணி பாத்தாரு நம்ம வாட்ச்மேன் . திடீர்னு ஒரு புள்ள வந்து சேலைய அவுக்க ஆரம்பிச்சுட்டு . அதுக்கு மேல என்னா நடக்குதுன்னு ஆர்வமா அவரு பாக்க , பொசுக்குன்னு கரண்ட் போயிருச்சு . ஆமாங்க தமிழ்நாட்டுல இருந்த கரண்ட் கட்டு கர்நாடகாவையும் தாக்கிடுச்சு . கடுப்சான வாட்ச்மேன் நேரா அந்த எம்.எல்.ஏக்கிட்டயே போய் படத்த போட்டு காட்டுங்கன்னு கேட்டாரு . பட் என்ன செய்ய எம்.எல்.ஏ அந்த படத்த நான் டெலிட் பண்ணிட்டன்னு சொல்லிட்டாரு . இதனால கடுப்சான வாட்ச்மேன் , கேமரால பதிவான ஒரே ஒரு சீன வச்சு அவரு பிட்டு படம் தான் பாத்தாருன்னு சொல்லி ஆப்படிச்சுட்டாரு . அப்புறம் என்ன , அந்த எம்.எல்.ஏ நான் மட்டும் பாக்கல , என்னோட தோஸ்த்களும் பாத்தாங்கன்னு “ஆபத்தில் காப்பான் தோழன்” ரேஞ்சுக்கு போட்டு குடுத்துட்டாரு . அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் நாடே அறியும் . சரி உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லுறீங்க , சொல்லுறன் . அந்த எம்.எல்.ஏ எல்லாம் ராஜினாமா பண்ணிட்டாங்க பதவிய . அதாவது ஒரு குற்றத்துக்கு கட்டுப்பட்டு பதவிய துச்சம்னு தூக்கி எறிஞ்சிட்டாங்க .

எல்லாரும் எங்க போறீங்க ?? இன்னும் கிளைமாக்ஸ் வரலைங்க . இவங்க பாத்ததுக்கு அப்புறம் கொஞ்ச நாள் சட்டசபை கொஞ்ச நாள் தூக்க சபையா தான் போனுச்சு . அப்புறம் யாரு பில்லி சூனியம் வச்சாங்கன்னு தெரியல வரிசையா அந்த கட்சி ஆளுங்க எல்லாம் சட்டசபைல படம் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க . இதன் விளைவா பி.ஜே.பிங்குற கட்சியோட அப்ரிவேசன பிட்டு ஜனதா பார்ட்டின்னு மாத்திட்டாங்க நம்ம பயபுள்ளைக .

இதல்லாம் விட என்னா பெரிய காமெடின்னா அந்த எம்.எல்.ஏ என்னா படம் பாத்தாருன்னு காங்கிரஸ் காரங்க எல்லாம் பெரிய மனசு பண்ணி சி.டி.யா விட்டுட்டாங்க . கேட்டா எதிர்கட்சிக்கு எதிரா பண்ணுறோம்னு கட்சி நியாய தர்மம் பேசுறாங்க . ஏண்டா உங்களுக்கு கடமை உணர்ச்சி இருக்கலாம் அதுக்குன்னு இப்படிலாமா ??? முடியல

டிஸ்கி : இந்த பதிவ நான் எழுத ஆரம்பிச்சப்ப காமெடி பீஸா இருந்த பா.ஜ.க வை வீழ்த்தி விட்டு காங்கிரஸ் காமெடி பீஸாகிடுச்சு . இது நானே எதிர்பாக்காத ட்விஸ்ட்

March 23, 2012

கடலதொரைக்கு கண்ணீர் கடிதம்.......

அன்புள்ள கட்டதொரைக்கு ,

லெட்டரோட ஆரம்பத்துல ஏதோ போனா போகுதேன்னு அன்புள்ளன்னு போட்டுருக்கன் . எப்பவும் போல இந்த வாட்டியும் பஞ்சாயத்துல உன் மேல தான் பிராது குடுத்துருக்காங்க . இந்த வாட்டியும் பிராது உன்னோட கடலை வறுக்குறது பத்தி தான்னு வருத்தத்தோடயும் , ஆத்திரத்தோடயும் சொல்லிக்குறன் .

உன்னோட எஸ்.டி.டீ எனக்கு நல்லாவே தெரியும் . நீ பொறந்தோன உனக்கு வைத்தியம் பாத்த டாக்டர் மெண்டல் ஆனாங்க . அதுக்கு அப்புறம் ஸ்கூல் , காலேஜ் படிச்சப்ப (ச்ச எட்டிபாத்தப்ப) அங்க இருந்தவங்க லூசு ஆனாங்க . அதனால உன் டார்ச்சர் தாங்காம உன்னைய துபாய்க்கு அனுப்புனாங்க . ஆனா நீ அங்கையும் எல்லாரையும் மெண்டலாக்கிட்டு இப்ப ஒட்டகத்த மெண்டல் ஆக்குற வேலைல இருக்கன்னு கேள்விபட்டேன்.

நீ கடல போடு வேணான்னு சொல்லல . ஏன்னா கடல போடுறது ஆண்களின் பிறப்புரிமை . ஆனா நீ மட்டுமே கடல போடாதன்னு தான் சொல்லுறோம் . ட்விட்டருக்கு வந்த ஆரம்பத்துல நான் உன்ன பாத்து தான் கடல போட கத்துக்கிட்டேன் . அப்ப நீ ஒரு பிரபல ட்விட்டரா 700 பாலோயர்சோட இருந்த . அதனால பல பொண்ணுங்கக்கிட்ட கடல போட்ட . அத பாத்து நானும் பிரபல ட்விட்டர் ஆகனும்னு சபதம் எடுத்தன் . அன்னைலேந்து இன்னைக்கு வரைக்கும் அதுக்கு போராடிக்கிட்டு இருக்கன் . இடைபட்ட காலத்துல நானும் ரெண்டு மூணு பொண்ணுக்கிட்ட கடல போட்டுக்கிட்டு இருந்தன் . ஆனா அத பாத்து பொறாமபட்ட நீ எனக்கு எதிரா சதி பண்ணி அந்த பொண்ணுங்ககிட்டயும் நீயே கடல போட்ட . பொறுத்துக்கிட்டேன் . ஏன் , உன் வயசுக்கு நீ அப்படி இருப்பன்னு நெனச்சா  ? இல்ல எனக்கு இன்னும் வயசு இருக்கு வேற பொண்ண உசார் பண்ணலாம்னு தான் . ஆனா அத தப்பா புரிஞ்சுக்கிட்ட நீ என்னை மட்டும் இல்லாம சக ட்விட்டர்கள் கடல போட்ட பொண்ணுங்க மனசயும் கலைச்சு உன்னோட கடல போட வச்ச . 

ஐயர் மாமிக்கிட்ட கடல போட்ட . கேட்டா சமையல் டிப்ஸ் வாங்குறன்னு சொல்லி எங்க வாய அடைச்சுட்ட . உன்னைய எதுக்கு விட்டோம் நீ சொன்ன காரணத்துக்காகவா இல்ல , உன் வயசுக்கு ஏத்த மாதிரி ஆளுங்க கூட பேசுறன்னு . அத நீ அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு சின்ன பொண்ணுங்க கூட எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட.

நீ ஆண்ட்ராயிட் போன் வாங்குன . நாங்க சந்தோசப்பட்டோம் . எங்க குரூப்லயும் ஒரு ஆளு ஆண்ட்ராயிட் போன் வாங்கிட்டாருன்னு . ஆனா நீ அந்த போன் வந்தோன எல்லாருக்கிட்டயும் அதுக்கு ஆப்ஸ் (Apps) எங்க டவுன்லோடனும்னு கேட்ட . அதுக்குன்னே எங்க ஷேக்ன்னு ஒரு ஆம்பள இருக்குறப்ப நீ அத விட்டுட்டு மத்த பொண்ணுங்கக்கிட்ட கேக்க ஆரம்பிச்சுட்ட . அந்த பொண்ணுங்ககிட்ட ஆப்ஸ் கேக்குறன்னு சொல்லி உன்னோட ஆண்ட்ராயிட் போன காட்டி சீன் போட்டு அவங்களையும் உன் பக்கம் இழுத்துக்கிட்ட . இது என்ன நியாயம் கட்டதொர அவர்களே ?

நீ தனியா உன் பேர்ல வெப்சைட் ஆரம்பிச்சப்ப சந்தோசப்பட்டோம் . நாங்களாம் பிலாக் வச்சு காலம் தள்ளிக்கிட்டு இருக்குறப்ப நீ தனியா பெரிய வெப்சைட் ஆரம்பிக்குறன்னு பெருமையா இருந்துச்சு . ஆனா அப்பயும் நீ அடங்கல . வெப்சைட்டுக்கு கோடிங் எழுதுறதுக்கு ஆளு தேடுன . ட்விட்டர்ல எத்தனையோ திறமையான ஆண் டிசைனர்ஸ் இருக்கும் போது நீ அவங்கள எல்லாம் குப்பைதொட்டில போட்டுட்டு , இன்னொரு பொண்ணோட உதவிய தான் தேடுன . அப்புறம் அந்த கோடிங் மேட்டர மறந்துட்டு கடல வறுக்க ஆரம்பிச்சுட்ட .

இம்புட்டு அதுப்பு பண்ணது பத்தாதுன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி 12ப்பு பெயில் ஆன ஒரு பொண்ணுக்கிட்ட பழக ஆரம்பிச்ச . சரி ஏதோ சின்ன பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணுறன்னு எட்டி பாத்தா அந்த பொண்ணுக்கிட்டயும் கடல தான் போட்டுக்கிட்டு இருக்க . அந்த புள்ள உன்னைய மானாவாரியா திட்டுச்சு . ஆனா நீ சண்டைல சட்டையே கிழியாத மாதிரி திருப்பி திருப்பி கடலை போடுற . உன்னைய திருத்தவே முடியாதான்னு நாங்க ஏங்கிகிட்டு இருந்தப்ப தான் உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்த இருக்குற மேட்டரு தெரிஞ்சுது . அத வச்சு உன் டெபாசிட்ட காலி பண்ணலாம்னு பாத்தா நீ ஏதோ பில்லி , சூனியம் வைச்சு எல்லாரையும் அந்த மேட்டர மறக்க வைச்சுட்ட .

அதுக்கு அப்புறம் அண்ணியோட பேஸ்புக் காண்டாக்ட் கிடைச்சு அவங்கக்கிட்ட உன்னைய பத்தி சொன்னன் . அதுக்கு அப்புறம் அண்ணி உன்னைய ரூம்ல கட்டி வைச்சு அடிச்சதுல ரெண்டு நாள் சும்மா இருந்த . அதுக்கு அப்புறம் அவங்களுக்கு நீ செஞ்ச மீன் குழம்ப குடுத்து அவங்கள மட்டையாக்கிட்டு திருப்பி உன் கடல யாவாரத்த ஆரம்பிச்ச.

அண்ணிய தான் கவுத்துட்டன்னு உன் தங்கச்சிக்கிட்ட சொன்னா அவங்கக்கிட்டயும் ஏதோ பேமிலி சாங்கு பாடி உனக்கு ஆதரவா திருப்பிக்கிட்ட . 

சரி உன் தொல்லைய எப்படி ஒழிக்குறதுன்னு உன்கிட்ட பேசி சுமூகமா முடிவுக்கு வரலாம்னு பேசுனதுல , ஒரு ஓட்டெடுப்பு நடத்தி அதுல மெஜாரிட்டி ஆளுங்க சொல்லுறத கேக்குறன்னு சொன்ன . சரி பெரிய மனுசனாச்சேன்னு நானும் ஓட்டெடுப்புக்கு தயார் பண்ணன் . அங்கையும் உன் சித்து வேலைய காட்டி கள்ள ஓட்டு போட்டுருக்க .

இம்புட்டு நாள் எதுக்கு உன் தொல்லைய பொறுத்துக்கிட்டன்னா நீ துபாய்லேந்து வர்றப்ப பேரீச்சம்பழமும் , டிரவுசரும் வாங்கிட்டு வருவன்னு ஒரு நம்பிக்கைல தான் . ஆனா நீ என்னோட அட்ரஸ் தெரியாதுன்னு சொல்லி அனுப்ப முடியாதுன்னு மறுத்துட்ட . அதனால தான் இப்ப நான் பொங்கி எழுந்துட்டன் .

இன்னைக்கு சாயங்காலம் கூடுற பஞ்சாயத்துல உன்னோட வேட்டி உருவப்படும் . அதுக்கு முன்னாடி நீ நல்ல டிரவுசரா உள்ளார போட்டுட்டு வந்துரு .......

இப்படிக்கு , 
கண்ணீருடன் உன் சிஷ்யன் “குட்டி

March 4, 2012

அரவான் - எளிவனின் விதி


பழைய தமிழகத்தில் பலி கொடுக்கும் பழக்கம் என்று ஒன்று இருந்தது . அதன்படி இரு ஊர்களுக்கு நடுவே அமைதி நிலவ , குற்றங்கள் குறைய ஒருவரை பலி கொடுப்பது வழக்கம் .18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசு பலி முறையை ஒழித்தது . அந்த பலி முறையை சார்ந்து எடுக்கபட்ட படமே அரவான்.



கதை :
கொம்பூதி(பசுபதி)யும் , அவர் கூட்டாளிகளும் களவாட செல்லுவது போல் ஆரம்பிக்கிறது படம் .அங்கு வெற்றிகரமாக களவாடி விட்டு வந்த பின்பு அவர்கள் ஊர் பெயரை சொல்லி வரிப்புலி(ஆதி) களவாடுவது தெரிய வருகிறது . அவன் யாரென்று கண்டுபிடித்து அவனிடன் இருந்து அந்த திருட்டுபொருளை மீட்டு எடுக்கிறார் பசுபதி . பின்பு ஆதியின் திறம் கண்டு தங்கள் களவுகூட்டத்தில் சேர்த்துகொள்கிறார் . ஆதியிடம் அவன் யாரென்று கேட்டதற்கு தான் ஒரு அனாதை என்று பதிலளிக்கிறார் . ஒரு கட்டத்தில் பசுபதியின் தங்கை ஆதியின் மீது காதல்வயப்பட பசுபதி ஆதியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்கிறார் . அப்பொழுது ஆதி தனக்கு திருமணம் ஆகிவிட்டது என அதிர்ச்சியான தகவலை கூறுகிறார் . அந்த நேரத்தில் ஒரு ஜல்லிக்கட்டில் பசுபதியின் ஊர் பெயரை சொல்லி ஒருவன் சவாலுக்கு இழுக்கிறான் . அப்பொழுது ஆதி தானும் பசுபதியின் ஊரை சேர்ந்தவனே என்று உண்மையை உடைக்கிறார் . ஜல்லிக்கட்டில் ஆதி ஜெயிக்கும் பொழுது ஒரு கும்பல் அவரை இழுத்து கொண்டு செல்கிறது . அப்பொழுது ஆதி ஒரு ஊரின் பலி ஆடு என்பது தெரியவருகிறது . அதற்கு பின்பு விரிவதே இரண்டாம் பாதியும் , படத்தின் இன்னொரு கதையும் .

ஆதியின் மாஸ்டர்பீசாக இந்த படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை . ஈரம் படத்திற்கு பின்பு ஆதியின் விஸ்வரூபம் இந்த படத்தில் தெரிகிறது . அவருக்கு போட்டி பசுபதியே . படத்தின் இரண்டாம் கதாநாயகனா இல்லை அவர் தான் கதாநாயகனா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது அவரது நடிப்பு .
ஆதி திருடிவிடக்கூடாது என்பதற்காக பசுபதி மரத்தை வெட்ட சொல்வதும் , அதை தனக்கு சாதகம் என்று ஆதி சொல்வதும் செம்ம ரிவீட் . படத்தின் ஆங்காங்கே நகைச்சுவையை தூவிவிட்டு படத்தை அலுக்காமல் கொண்டு சென்றிக்கிறார் இயக்குனர் . கருங்காலியாக வரும் நபர் கிரேட் செலக்‌ஷன் . தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும் இடங்கள் என்றால் சிங்கம்புலி வரும் கொளுந்தியாள் பாகம் தான் . படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் போய் விட்டு இரண்டாம் பாதியை இந்த இழு இழுத்திருப்பது ஏனோ ? .

படத்தில் கதாநாயகிகளுக்கு மிக பெரிய ஸ்கோப் இருக்கும் என்று பார்த்தால் அவர்கள் இடத்தையும் சேர்த்து மற்ற நடிகர்களே ஆக்கிரமித்து கொள்கின்றனர் . முதல் பாதியில் வரும் அர்ச்சனாகவியை(சிமிட்டி) மறந்தும் கூட இரண்டாம் பாதியில் காட்டவில்லை . தன்ஷிகா(பேச்சி) சும்மாக்காச்சுக்கும் வந்து போகிறார் . அஞ்சலி படத்தில் உண்டு என்று நம்பி போனால் அவர் அழுவதை தவிர வேறு ஒரு வேலையும் செய்யவில்லை . பரத் ஏனோ மனதில் ஒட்ட மறுக்கிறார் . ராஜாவாக வருபவர் சில நிமிடம் வந்தாலும் வில்லத்தனத்தை பார்வையிலேயே விதைத்து விட்டு செல்கிறார் . தாசியாக வருபவர் வெள்ளி அரைஞான் கொடியை வைத்து கண்டுபிடிப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தில் ஒன்று .

படத்தில் ஒரு எளியவன் வலியவனால் எப்படி தன் வாழ்க்கையை இழக்கிறான் என்பதை மிகச்சரியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் . தான் செய்யாத ஒரு குற்றத்திற்கு ஒரு மனிதன் பலியாகும் போது என்ன என்ன நிகழும் என்பதற்கு இந்த படம் ஒரு அத்தாட்சி . படத்தின் கருத்து என்று இயக்குனர் கூறுவது ”மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்பதே . பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு மனதில் ஒட்டவில்லை .

படத்தின் பலங்கள் :

பழந்தமிழகம் எப்படி இருக்குமென்று அப்படியே கண் முன் நிறுத்தியதும் , பழந்தமிழரின் வாழ்க்கை எப்படி இருக்குமென்று துல்லிமாக காட்டியது .

களவாடும் முறையை இதுவரை தமிழில் காட்டியிடாதவாறு தெளிவாக காட்டியது .

பசுபதியும் அவர் கூட்டாளிகளும் சேர்ந்து திருடும் காட்சிகள் .

மகாராஜா என்றால் பெரிய அரண்மனை என்று காட்டாமல் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார் என காட்டியது .

சிங்கம்புலியை நகைச்சுவைக்கு மட்டும் உபயோகப்படுத்தாமல் படத்தின் திருப்புமுனைக்கும் பயன்படுத்தியது .

பழந்தமிழர் என்றால் செந்தமிழில் தான் பேசுவார்கள் என்று காட்டாமல் வழக்குமொழியில் பேச வைத்திருப்பது .

அசாதாரணமாக உழைத்த படத்தின் நடிகர்கள் அனைவரும் .

ஈட்டி போன்ற வசனங்கள் (வசந்தபாலன் - வெங்கடேசன்)

எதற்காக பலி கொடுக்கிறார்கள் , பலி தோன்றியதன் வரலாறை சுருக்கமாக ராஜா சொல்லும் காட்சி .

கார்த்திக்கின் இசை (அறிமுகம்)

அசாதாரணமான கோணங்களில் காட்டிய கேமராமேன் சித்தார்த்

அடிசறுக்கும் இடங்கள் :

படத்தின் போஸ்டரில் நிஜமாட்டை காட்டிவிட்டு அந்த காட்சி முழுக்க கிராபிக்ஸ் உபயோகபடுத்தியிருப்பது .

பல இடங்களில் கிராபிக்ஸ் கேவலமாக இருப்பது .

அந்த தேவையில்லாத உன்ன கொல்ல போறேன் பாடல் .

அவசர அவசரமாக முடிக்கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ் .

கருத்து சொல்லி தான் படத்தை முடிக்க வேண்டும் என்று வலிய ஒரு கருத்தை திணித்திருப்பது .

படத்தில் நச் என்று பதிந்த வசனங்கள் :

ஊர்மக்கள் : களவாணிப்பயல கட்டுங்கடா
வரிப்புலி : நான் களவாணின்னா நீங்களாம் யாருடா ?

சிமிட்டி : வாக்கு ஜக்கம்மாதுன்னாலும் நாக்கு சிமிட்டியிது

ஜமீந்தாரின் மனைவி : இந்த கிழவி வெத்தல இடிக்கிறாளா இல்ல வீட்டையே இடிக்கிறாளா ? ஊருக்கு எல்லாம் இவ சத்தம் கேக்குது அந்த எமனுக்கு கேக்காதா ??

அஞ்சலி (இது நச் வசனம் இல்லை இந்த படத்தில் அவர் பேசிய ஒரே வசனம்) : அப்பா இனிமே இவர பாக்க மாட்டன்பா

வரிப்புலி : களவுலேந்து தான் காவல் பொறக்கும்

சிங்கம்புலி : என் பொண்டாட்டிய பாத்துருந்தா கூட விட்டுருப்பன் , ஆனா என் கொழுந்தியாள பாக்குறான்பா

சிமிட்டி : அரவட்ட கல்ல நான் கூட தூக்கிகிட்டு ஓடுவன் 

கூத்து கட்டுபவர் : நான் வாக்கு தவற மாட்டன் . எனக்கு வாக்கு தான் நாக்கு

சிங்கம்புலி : இன்னும் ஒரு வருசம் கழிச்சு வந்துருக்கலாம்ல ?
ஆதி : விதிடா

பசுபதி : தூக்கம் வர்றவன் களவுக்கு வரக்கூடாதுடா

சிங்கம்புலி : யெப்பா கிட்டக்க போவாதப்பா , மாத்தூரான் சின்ன புள்ளைய வச்சு நம்மள புடிக்க பாக்குறான் . கத்திய எடுத்து சொருவிட போறா

டிஸ்கி : தயவுசெய்து மசாலா பட விரும்பிகள் இந்த படத்திற்கு செல்ல வேண்டாம் . பார்த்து விட்டு என்னை திட்டினால் நான் பொறுப்பல்ல .