February 24, 2012

தொடரும் மனிதஉரிமை மீறல்கள்

இப்பொழுது நடந்திருக்கும் வேளச்சேரி என்கவுண்டர் பற்றி தான் இணையத்தில் எல்லோரும் பரவலாக பேசி வருகிறார்கள் . ஆனால் இதிலும் இரு சாரார் பிரிந்து சண்டையிட்டு கொள்வது தான் வருந்ததக்க விஷயம் . 

ஒரு சாரார் அவர்களை கொன்றது சரி என்றும் , இன்னொரு சாரார் அவர்களை கொன்றது தவறு என்றும் வாதிடுகிறார்கள் . என் பார்வையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகப்பெரிய தவறே . 5 பேரை சுட்டுக்கொன்றது சட்டத்தை காக்கும் செயல் என்றால் பலநூறு பேரை கொன்ற கசாப்பை இன்னும் சிறையில் வைத்து அழகு பார்ப்பதன் உள்நோக்கம் எதுவோ ?

சென்ற ஜனவரி 23ந் தேதி 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் தான் இவர்கள் . 20 லட்சம் பணத்திற்காக 5 பேரை கொல்ல தயங்காத அரசு , பல்லாயிரம் கோடியை கொள்ளையடிக்கும் பணமுதலைகளை இன்னும் விட்டு வைத்திருப்பது இந்த நூற்றாண்டின் உச்சகட்ட கேவலம் . 

தமிழ்நாட்டில் இதுவரை இப்படி ஒரு என்கவுண்டர் நடக்கவில்லை என்று வேறு போலீசார் தங்கள் மார் தூக்கி சொல்கிறார்கள் . இந்த சம்பவத்திற்கு இன்னும் ஒரு மனித உரிமை அமைப்பு கூட கண்டனம் தெரிவிக்கவில்லை  . அவர்களும் இதை ஏற்றுக்கொண்டார்களோ என்று அஞ்சத்தோன்றுகிறது . இதை விட அச்சபடவேண்டிய தகவல் ஒன்று இருக்கிறது . அது மக்கள் இந்த என்கவுண்டரை வரவேற்று இருப்பது தான் . மக்கள் இப்படியே வரவேற்பார்களானால் ஒரு நாள் அவர்களே வருத்தபட வேண்டியது இருக்கும் .

ஒரு கட்டத்தில் எந்த தண்டனைக்கும் என்கவுண்டரை செயல்படுத்தலாம் என்ற நிலைமை ஏற்படலாம் . இதில் இன்னொரு வினோதம் போலீசாரின் செயல்பாடே . மாலையிலேயே கொள்ளையர்களை பற்றி துப்பு கிடைத்தும் அதை பொருட்படுத்தாமல் நள்ளிரவு 1.30க்கு இந்த என்கவுண்டரை நிறைவேற்றியிருப்பது , கொள்ளையர்களை உயிரோடு விட்டால் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என நினைத்து செயல்பட்டதையே சுட்டிக்காட்டுகிறது .

கொள்ளையடித்த பணத்தை மீட்டு விட்டோம் என கூறுகிறார்கள் . ஆனால் 5 உயிர்களின் விலை 20 லட்சமா ?? பிற்காலத்தில் தங்களுக்கு வேண்டாதவர்களை சுட்டுக்கொல்ல மக்கள் கூலிப்படைகளை நாடாமல் போலீசாரை நாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .

சட்டம் , ஒழுங்கு நிலைநாட்ட பட்டுவிட்டது என பலர் பேட்டி கொடுக்கிறார்கள் . ஆனால் இது மக்களின் மனதில் ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என சொல்ல மறந்து விட்டார்கள் . இனிவரும் காலத்திலாவது மக்கள் இதை போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை ஆதரிப்பதை விட்டொழிக்கட்டும் .

5 comments:

  1. கட்டுரையின் சாராம்சம் நல்லாருக்கு.. ஆனா என் தனிப்பட்ட கருத்து செத்தது தியாகிங்க கிடையாது, இந்த மாதிரி ஆளுங்க சாகட்டுமே, அப்பவாவது மற கொள்ளையர்களுக்கு பயம் வரட்டும்

    ReplyDelete
  2. பிளாக் லே அவுட் ,டிசைனிங்க் சிம்ப்பிள் & நீட்

    ReplyDelete
  3. @சி.பி.செந்தில்குமார்

    பிளாக்க பத்தி கமெண்டியதற்கு நன்றி தல

    நான் அவங்கள நியாயப்படுத்தல தல , நம்ம அதிகாரிங்க கொஞ்சம் அவங்கள புடிச்சு விசாரிச்சு இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு தான் சொல்றன் .

    ReplyDelete
  4. திருடுனது நியாயம்ன்னு சொல்லல. நமது வருத்தம் ஐந்து பேரின் உயிர். சுடப்பட்ட பின் நடந்தது என்னென்னு விசாரணை பண்ணி என்ன புண்ணியம். :(

    ReplyDelete
  5. @jeganjeeva

    அதே தான் எனது வருத்தமும் இந்த பதிவில்

    ReplyDelete